அண்ணாமலை கூறியுள்ள இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக உள்ளதாக குற்றம்சாட்டி சென்னை மாவட்ட முதன்மை கோர்ட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சார்பில் மாநகர தலைமை குற்றவியல் வக்கீல் கிரிமினல் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த வழக்கு மனுவில் கூறி இருப்பதாவது:- தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கூறியுள்ள அவதூறு குற்றச்சாட்டுகள், கருத்துக்கள் அனைத்தும் பத்திரிகையிலும் சமூக வலைதளங்களிலும் வெளியாகி உள்ளது. அவரது பேட்டி அடங்கிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் உள்ளது.
அவர் கூறியுள்ள கருத்துக்கள் அனைத்தும் பொய்யானவை மட்டுமல்ல, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நற்பெயருக்கு குந்தகம் ஏற்படுத்தும் விதமாக உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் மத்தியில் நற்பெயரையும், அன்பையும் பெற்றுள்ளார். அதை சீர்குலைக்கும் விதமாக செயல்பட்டுள்ள தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை மீது இந்திய தண்டனைச் சட்டம் 499 மற்றும் 500-ன் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த மனு மீதான விசாரணையை 2 மாதத்துக்கு ஒத்திவைத்தார். இதையடுத்து இந்த மனு மீதான விசாரணை சென்னை மாவட்ட முதன்மை கோர்ட்டில் 2 மாதத்துக்கு பிறகு நடைபெற உள்ளது.