இந்த நிலையில் மெட்ரோ ரெயில் திட்டத்திற்காக திருமங்கலம் முதல் வைகை யாற்று வழியாக ஒத்தக்கடை வரை செல்லும் வழித்தடத்தில் மண் பரிசோதனை செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ½ கி.மீ. தூரத்துக்கும் இந்த பரிசோதனை நடைபெறுகிறது. நவீன எந்திரம் மூலம் 30 அடி ஆழம் தோண்டப்பட்டு மண்ணின் உறுதித்தன்மை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்தப்பணியில் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், மதுரையில் மெட்ரோ ரெயில் சேவை கட்டுமான பணிகளை அடுத்த ஆண்டு தொடங்கி 2027-ம் ஆண்டு முடிக்க அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது முதற்கட்டமாக ரெயில் வழித்தடம் அமைய உள்ள பகுதிகளில் மண் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு இடத்திலும் மண்ணின் தன்மை மாறுபட்டு உள்ளது. இதனை தனித்தனியாக சேகரித்து ஐதராபாத்தில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்ப உள்ளோம் என்றனர்.
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக பெரு நகரங்களாக விளங்கும் கோவை, திருச்சி, மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படும் என கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரையில் 31 கி.மீ. தூரத்துக்கு முதற்கட்டமாக மெட்ரோ ரெயில் சேவை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு ரூ.8,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 31 கி.மீ. தூரத்திற்கு அமைய உள்ள மெட்ரோ ரெயில் வழித்தடத்தில் 10 ரெயில் நிறுத்தங்கள் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.