No results found

    ஊராட்சி மன்ற அலுவலகத்தை பூட்டிய பொதுமக்கள்


    தருமபுரி மாவட்டம், கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சுங்கரஅள்ளி ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமல் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து ஏற்கனவே கடந்த மே 1-ம் தேதி நடை பெற்ற கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் தொடர்ந்து கிராம சபை கூட்டங்களின் தீர்மான அடிப்படையில் எந்த ஒரு வளர்ச்சி பணிகளையும் ஊராட்சி நிர்வாகம் செய்யவில்லை எனக்கூறி நேற்று முன்தினம் சுங்கரஅள்ளி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு பூட்டு போட்டு சாவியை எடுத்துச் சென்றனர்.

    நேற்று காலையில் ஊராட்சி மன்ற பணிகளை செய்ய வருகை தந்த ஊராட்சி செயலாளர் ராஜேந்திரன் புதியதாக போட்டிருந்த பூட்டை கண்டு அதிர்ச்சியடைந்து வட்டார வளர்ச்சித்துறை அலுவலர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவருக்கு தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் ஊராட்சி மன்ற தலைவர் அபிராமி, கடத்தூர் வட்டார வளர்ச்சி துணை அலுவலர் குமார் ஆகியோர் வருகை தந்து பூட்டு போட்ட பொதுமக்கள் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த தகவல் அறிந்த கடத்தூர் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    சில நாட்களில் பொதுமக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றி தருவதாக அதிகாரி முன்னிலையில் தலைவர் அளித்த உறுதியின் பேரில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர். ஊராட்சி மன்ற அலுவலகத்தின் கதவை அதிகாரிகள் திறந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு ஊராட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்ய ப்படாமல் உள்ளது என பல பகுதிகளிலும் பொதுமக்கள் குற்றச்சாட்டு எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    Previous Next

    نموذج الاتصال