No results found

    அ.தி.மு.க. ஆட்சியில்தான் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்தது- அமைச்சர் பொன்முடி குற்றச்சாட்டு


    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தை சேர்ந்த 6 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தனர். மேலும் 28 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் நேற்று மதியம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் ஆகியோர் நேரில் சென்று அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறி நலம் விசாரித்தனர். மேலும், அங்கிருந்த டாக்டர்களிடம் உரிய சிகிச்சை அளிக்குமாறு அறிவுறுத்தினர்.

    பின்னர் அமைச்சர் பொன்முடி நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் குட்கா, கஞ்சா, கள்ளச்சாராயம் போன்ற போதை பொருட்கள் விற்பனை அதிகரித்தது கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் தான். அப்போது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கட்சிக்காரர்களை ஊக்கப்படுத்தி விற்கவைத்ததே அவர்கள்தான். கடந்த 2 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்கள் விற்பனையை தடுப்பது தொடர்பாக சிறப்பான நடவடிக்கை எடுத்து வருகிறார். இதற்காக காவல்துறைக்கு அவர் அடிக்கடி ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார். மேலும் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க காவல்துறையில் தனி ஆணையத்தையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்கி உள்ளார். அதனால் தான் குறைந்துள்ளது. தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதை நாங்கள் அரசியலாக்க விரும்பவில்லை. கடந்த காலத்தில் ஜெயலலிதா ஆட்சியில் தான் டாஸ்மாக் கடைகள் மூலம் மதுவை அரசே விற்பனை செய்யும் என அறிவித்தார். அரசின் வருமானத்திற்காக டாஸ்மாக் மூலம் மது விற்பனையை கொண்டு வந்தார். அதற்கு சட்டமன்றத்தில் நான் எதிர்ப்பு தெரிவித்தேன். தற்போது வேண்டுமென்றே அரசின் மீது குறை, பழி சொல்லவேண்டும் என ஒருவர் பேசியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

    Previous Next

    نموذج الاتصال