No results found

    வீட்டு வசதி வாரியத்தில் பழுதடைந்த 60 கட்டிடங்கள் இடிக்கும் பணி தொடங்கியுள்ளது- அமைச்சர் முத்துசாமி


    ஈரோடு அருகே உள்ள கதிரம்பட்டி, வாவிகடை, சிலேட்டர்நகர், பெருந்துறையில் 3 இடங்கள் என மொத்தம் 6 இடங்களில் ரூ.15 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை, சாலை விரிவாக்கம் பணிக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. அமைச்சர் சு.முத்துசாமி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி சாலை அமைப்பதற்கான பணியை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஈரோடு ஒன்றியத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் 3 பணிகள், பெருந்துறையில் 3 பணிகள் என மொத்தம் 6 பணிகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.15 கோடியே 75 லட்சம் மதிப்பில் இந்த 6 பணிகளும் நடைபெற உள்ளது. மக்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த திட்டம் இது. இன்னும் 6 மாதத்தில் முடிவடையும். மக்களுக்காக இதேபோல் இன்னும் ஏராளமான திட்டங்கள் உள்ளன.

    இதேப்போல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளுக்கும் பல கோடி மதிப்பில் திட்டங்கள் உள்ளன. வீட்டு வசதி வாரியத்தில் 50 சதவீத காலி பணியிடங்கள் உள்ளன. இதில் வாரிசு அடிப்படையில் சில பணியிடங்களை நிரப்ப வேண்டும். இந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்கான பணி தொடங்கியுள்ளது. சர்வீஸ் கமிஷன் மூலம் இவை நிரப்பப்பட வேண்டும். அதற்கு சில கால அவகாசம் தேவைப்படுகிறது. வீட்டு வசதி வாரியத்தில் தமிழகம் முழுவதும் இடிந்து விழும் நிலையில் இருந்த 138 கட்டிடங்கள் கண்டறியபட்டு அதில் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் 60 கட்டிங்கள் இடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பழைய குடியிருப்புகளை இடிக்கும் இடத்தில் நவீன குடியிருப்புகள் கட்டப்படும். வீட்டு வசதி வாரியத்தின் மூலமாக சுயநிதி திட்டத்தின் கீழ் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்ட இடங்களில் வீட்டு வசதி வாரியம் சார்பில் குடியிருப்புகள் கட்டும் பணிக்கான சட்டத்திருத்தத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது. இந்த பணிகளும் விரைவில் தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாநகர செயலாளர் சுப்பிரமணியம், மாவட்ட துணைச்செயலாளர் செந்தில்குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    Previous Next

    نموذج الاتصال