பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு நேற்று முன்தினம் வெளியானது. இந்த நிலையில் பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளை இன்று கவர்னர் ஆர்.என்.ரவி சந்தித்தார். இந்நிகழ்ச்சி கவர்னர் மாளிகையில் இன்று நடந்தது. இதில் 600-க்கு 600 மதிப்பெண் பெற்ற திண்டுக்கல் மாணவி நந்தினி மற்றும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை ஸ்ரேயா உள்ளிட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். மேலும் சென்னை மாநகராட்சி பள்ளியில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ-மாணவிகளும் கலந்து கொண்டனர். மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடிய கவர்னர் ஆர்.என்.ரவி, அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து உயர்கல்வி படிப்புகள் தொடர்பாக ஆலோசனைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:- தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ-மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். ஆசிரியர்கள் பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். உங்களின் இலக்கு முதன்மையாக இருக்க வேண்டும். என்ன இலக்கை அடைய வேண்டும் என்பதில் மாணவர்களுக்கு தெளிவு இருக்க வேண்டும். பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இன்னும் பெரும் பயணம் செல்ல வேண்டி இருக்கிறது. மருத்துவம் படிக்க ஆசை இருப்பவர்கள் நீட் தேர்வுக்கு தயாராக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன், அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.