சென்னை கிழக்கு மாவட்டம் அம்பத்தூர் கிழக்கு பகுதி தி.மு.க. சார்பில் திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் கொரட்டூர் பஸ் நிலையம் அருகில் அம்பத்தூர் கிழக்கு பகுதி செயலாளர் எம்.டி.ஆர். நாகராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, விருகம்பாக்கம் சட்ட மன்ற உறுப்பினர் பிரபாகராஜா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், கவர்னர் என்னை மதிப்பிற்குரிய நண்பர் என்று குறிப்பிட்டார். அவர் என்னை நண்பர் என்று குறிப்பிட்டதற்காக அவருக்கு நான் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் கொள்கையிலே அவர் எங்களோடு சமரசமாக இல்லை என்றால் நிச்சயமாக கொள்கைக்காக நட்பை துறக்கவும் நான் தயார் என்று அறிவித்தவர் தான் நமது முதலமைச்சர்.
கடுமையான காலகட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற நான்கு மாதங்களுக்குள் கொரோனா நோய் தொற்றே இல்லாத கொரோனா சுவடே இல்லாத மாநிலமாக தமிழ் நாட்டை மாற்றிய பெருமை நமது முதல்வரையே சாரும். இந்த முதல்வர் இருக்கின்ற வரை ஒரு கவர்னர் ரவி அல்ல, ஓராயிரம் ரவிகள் ஒன்று கூடி வந்தாலும், இந்த ஆட்சியை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது என்றார். நிகழ்ச்சியில் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல், மண்டல குழு தலைவர் பி.கே. மூர்த்தி, பகுதி செயலாளர் டி.எஸ்.பி. ராஜகோபால் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.