No results found

  பிறந்த நாள் வழிபாட்டுக்குரிய ஒன்பத்துவேலி வன்மீகநாதர் கோவில்


  சிவாலயங்களுக்கு பிரசித்தி பெற்ற தஞ்சை மாவட்டத்தில் குடமுருட்டி ஆற்றங்கரையோரம் நீங்கா புகழுடன் பக்தர்கள் மனதில் நிலையாக இடம் பிடித்துள்ள கோவில் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள ஒன்பத்துவேலி வன்மீகநாதர் கோவில். தஞ்சை மாவட்டத்தில் சோழ மன்னர்கள் ஆட்சி செய்தபோது பல பகுதிகளில் சிவாலயங்கள் பலவற்றை கட்டி அதற்கு வழிபடும் முறைகளையும் வகுத்தனா். பண்டைய சோழ மன்னர்களும் அவர்களோடு இணைந்த வேத ஆராய்ச்சியாளர்களும் எந்தெந்த பகுதிகளில் என்னென்ன சிறப்புகள் என்பதை அறிந்து அதற்கேற்ற வகையில் கோவில்களை அமைத்து அவற்றை சிறப்பாக பராமரித்து பூஜைகள் நடத்த ஏற்பாடு செய்தனர்.

  அந்த வகையில் கட்டப்பட்டிருந்த பல்வேறு கோவில்கள் சிதிலம் அடைந்திருந்த போதிலும், பின்னர் அவற்றுக்குரிய சிறப்புகளை அறிந்து அவற்றை சீரமைத்து தினசரி வழிபாட்டுக்குரிய வகையில் இந்து சமய அறநிலைத்துறையும் மற்றும் ஆன்மீக பெரியோர்களும் செய்து வந்துள்ளனர். ஜோதிட வல்லுனர்கள் சோழ நாட்டின் தலைநகராக விளங்கிய தஞ்சைக்கு அருகில் பல்வேறு சிவன் கோவில்களை எழுப்பி உள்ளதை நம்மால் அறிய முடிகிறது. அந்த வகையில் திருக்காட்டுப்பள்ளி அருகில் உள்ள ஒன்பத்துவேலி கிராமத்தில் குடமுருட்டி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது வன்மீக நாதர் கோவில். ஒன்பத்துவேலி கிராமத்தின் வடகிழக்கில் சோமகலா அம்பாளுடன் வன்மீகநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது.

  ஒன்பத்துவேலி என்ற பெயர் ஒரு அபூர்வமான பெயராகும். ஜோதிட வல்லுனர்களும், கணித மேதைகளும் பண்டைய காலத்தில் வாழ்ந்த தலமே ஒன்பத்துவேலியாகும். தற்போதும் நவாம்சம், நவநீதிகள், நவபாஷாணம், நவ மூலிகைகள், நவசாரம், நவகற்கள், நவஜோதிகள், நவசக்திகள் என்பதாக ஒன்பது வகையான நவ சாதனங்கள் ஆன்மிக ரீதியாக பொங்கி பொழியும் தலம் என்பதால் ஜோதிடர்களும், குறிப்பாக எண்கணித ஜோதிடர்களும், நாடி கைரேகை ஜோதிடர்களும் கண்டிப்பாக வழிபட வேண்டிய தலம் வன்மீகநாதசுவாமி கோவில் ஆகும். நினைவாற்றல் பெருகும் இங்கிருந்து வான்வெளிநட்சத்திர கோள் தரிசனங்களை பெறுதல் நல்ல நினைவாற்றலை பெற்றுத்தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த கோவிலில் உள்ள சிவபெருமான், புற்றில் இருந்து தோன்றிய சிவலிங்கம் என்பதால் வன்மீகநாதசாமி என பெயர் வந்தது. வன்மீகம் என்பதற்கு புற்று என்று பொருள். அம்பாள், சோமகலா அம்பாள். இவர் சந்திரனின் அம்சத்தை பெற்று விளங்குபவராக அமைந்து அருள் வழங்கி வருகிறார். கோவில் பிரகாரத்தில் விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் தனி சன்னதியில் எழுந்தருளி உள்ளனர்.

  வன்மீக நாத சாமி கோவிலின் தல விருட்சம் நெல்லி மரம். நெல்லிமரத்தின் அடியில் நாகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு அவற்றிற்கு அபிஷேகம் நடந்து வருகிறது. முற்காலத்தில் ராஜராஜ சோழன் தஞ்சாவூரில் இருந்து குதிரையில் ஒன்பத்துவேலிக்கு வந்து முன்னிரவில் வானில் நட்சத்திர தரிசனங்களை பெற்றுச் சென்றதாகவும் கூறப்படுகிறது. பிறந்த நாளில் வழிபாடு ஒன்பத்து வேலி வன்மீகநாத சாமி கோவிலில் இருந்து வானில் விசேஷமான முறையில் நட்சத்திர தரிசனங்களை அந்த காலத்தில் பக்தர்கள் பெற்றார்கள் என்பது செவிவழி வந்த செய்தியாக அறியப் படுகிறது. ஒன்பத்துவேலியில் அருள்பாலிக்கும் வன்மீகநாதர், வான் மேகநாதர் என்றும் அழைக்கப்படுகிறாா்.

  பக்தர்கள் தங்கள் பிறந்த நட்சத்திர நாளில் ஒன்பத்துவேலி வன்மீகநாதர் கோவிலுக்கு சென்று வழிபட்டால் அனைத்து விதமான செல்வங்களையும் பெற்று வளமான வாழ்வை அடைவார்கள் என்பது நம்பிக்கை. இதனால் ஒன்பத்துவேலி வன்மீகநாதர் வளமான வாழ்வை அருளும் வன்மீகநாதர் என அழைக்கப்படுகிறார். மேலும் உடலில் ஏற்படும் சரும நோய்கள் தீர்க்க வன்மீகநாதரை வழிபட்டால் நிவாரணம் கிடைக்கும். 9-ந் தேதி பிறந்தவர்கள் இந்த தலத்தில் வழிபாடுகளை செய்வது விசேஷமானதாகும். 9 என்பது செவ்வாய்க்கு உரிய எண் ஆகும். இதனால் செவ்வாய் திசை, செவ்வாய் புத்தி உள்ளவர்கள் ஒன்பத்து வேலி வன்மீகநாதரை வழிபட்டால் வளமான வாழ்வு கிடைக்கும். இக்கோவிலில் தினமும் காலை 9 மணி முதல் 12 மணி வரை நடைதிறந்து இருக்கும். இந்த கோவில் குடமுழுக்கு கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி 2-ந் தேதி நடந்தது. 18 கை வனதுர்க்கை இந்த கோவிலில் சண்டிகேஸ்வரர் சன்னதிக்கிடையில் 18 கை வனதுர்க்கை உள்ளது. வனதுர்க்கையை எலுமிச்சை தோலில் விளக்கேற்றி வழிபட்டு வர பில்லி சூனியம், செய்வினை கோளாறுகள் நீங்கும் என்று கூறப்படுகிறது. இந்த பகுதியில் வேறு எங்கும் 18 கை உடைய வனதுர்க்கை சன்னதி இல்லை, இத்திருக்கோவிலில் மட்டும் 18 கை வனதுர்க்கை உள்ளது. 18 கை வனதுர்க்கைக்கு வெள்ளிக்கிழமைகளில் ராகு கால நேரத்தில் பூஜை நடந்து வருகிறது. கோவிலுக்கு செல்வது எப்படி? சென்னையில் இருந்து ஒன்பத்துவேலி வன்மீகநாதா் கோவிலுக்கு வர வரும்பும் பக்தர்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் தஞ்சைக்கு வந்து தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து கண்டியூர் வழியாக திருக்காட்டுப்பள்ளிக்கு செல்லும் பஸ்சில் பயணித்து பாம்பாலம்மன் கோவில் பஸ் நிறுத்தத்தில் இறங்கி கோவிலை அடையலாம். தென்மாவட்டங்களில் இருந்து இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் தஞ்சைக்கு வந்து தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து மேற்கூறிய பஸ் வழித்தடத்தில் பயணித்து கோவிலுக்கு செல்லலாம்.

  Previous Next

  نموذج الاتصال