No results found

  ஸ்ரீ பொன்முடி சூரியநந்தீஸ்வரர் உடனுறை ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி திருக்கோவில்


  ஜோதிர்லிங்கங்கள் இயற்கையாக, தானாகத் தோன்றுபவை. இவை மனிதனால் உருவாக்கப்படாத அதிசயங்கள். ஜோதிர்லிங்கங்கள் உயிரினங்களில் ஒளிந்து இருக்கும் இறைநிலையை பிரகடனப்படுத்துபவை. பூஜிப்பவர்களுக்கு ஆத்மபோதனை அளிப்பவை. வேதாந்த பிரம்மஞான தத்துவத்தை சூட்சுமமாக உணர்த்துபவை. விஞ்ஞான மெய்ஞான ரகசியங்களுக்கு நேரடி விளக்கம் அளிக்கும் எளிய பக்தி சாதனங்கள் இவை. பல யுகங்களுக்கு முன் தமிழ்நாட்டில் ராமேஸ்வரத்தில் ஸ்ரீ ராமனால் ராமலிங்கேஸ்வரர் என்ற ஜோதிர்லிங்கம் உருவாகியது. அதே போல் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகில் அமைந்திருக்கும் சென்னப்பமலைத் திருத்தலத்தில் 2002-ம் ஆண்டு மகா சிவராத்திரி அன்று பிரம்மகுரு ஸ்ரீ கோடி தாத்தா சுவாமிகளின் அருளால் 'ஸ்ரீ பொன்முடி சூர்ய நந்தீஸ்வரர்' ஜோதிர்லிங்கம் பூமியிலிருந்து தானாக தோன்றியது. பல யுகங்களாகத் தொடர்ந்து வரும் உத்பவ வரிசையில் இது 13-வது ஜோதிர்லிங்கமாகும். இது தமிழ்நாட்டின் இரண்டாவது ஜோதிர்லிங்கம்.

  தோற்றத்தில் நமக்குப் பழக்கப்பட்ட லிங்கத்தைப் போல உருவ ஒற்றுமை கொண்டிருந்தாலும், ஜோதிர்லிங்கங்கள் வெவ்வேறு வடிவங்களில் தோற்றம் கொள்பவை. ஏற்கனவே உள்ள பன்னிரெண்டு ஜோதிர்லிங்கங்களை தரிசித்தால் இந்த உண்மை தெரியும். ஜோதி வடிவில் காட்சி தர பரமனே ஜோதிர்லிங்கங்களில் நிரந்தரமாக குடியிருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த உலகம் தோன்றிய நாள் முதல் கொண்டு இந்தியாவில் ஏற்கனவே பன்னிரெண்டு திருத்தலங்களில் ஜோதிர்லிங்கங்கள் தோன்றியுள்ளன. பாற்கடலை தேவர்களும் அசுரர்களும், வாசுகி சர்ப்பத்தை கயிறாகவும், மேரு மலையை மத்தாகவும் கொண்டு கடைந்தனர். அப்போது வெளிவந்த அமிர்தத்தை, அசுரர்கள் பறித்துச்சென்றார்கள். அப்படி செல்லும்போது பூமியில் சிதறிய அமிர்தத் துகள்களே பின்னர் ஜோதிர்லிங்கங்களாக வெவ்வேறு கால கட்டங்களில் தோன்றின என்று புராணங்கள் கூறுகின்றன. அந்தந்த ஸ்தல புராணங்கள் ஜோதிர்லிங்கங்களின் பெருமைகளை பறைசாற்றினாலும், அவற்றில் பல ரகசியங்களும் மறைந்துள்ளன. ஆனாலும் தலைமுறை தலைமுறையாக சொல்லப்பட்ட தகவல்களை சுமந்து ஜோதிர்லிங்கங்கள் இப்போதும் மனித குலத்துக்கு வழிகாட்டியாக உள்ளது.

  இத்தகைய அதிசய ஜோதிர்லிங்கம்தான் இந்த பூவுலகின் 13-வது ஜோதிர்லிங்கமாக சென்னப்பமலையில் 2002-ம் ஆண்டு உருவாகியது. இயற்கையாக, பஞ்சபூத தத்துவங்களின் அடிப்படையில், தானாக, தன்னிச்சையாக, ஏற்கனவே நிர்மாணம் செய்யப்பட்ட இடத்தில், உலகமே வழிபடும் மகாசிவராத்திரி அன்று குறிப்பிட்ட புண்ணிய திதியில், சர்வ வேதநியமங்களோடு, யாகங்களும், ஹோமங்களும், மந்திரங்களும் முழங்க, சூட்சும ரூபத்தில் முப்பத்துமுக்கோடி தேவர்கள் வணங்க, பரம்பொருளே சித்தனாகி, சித்தனே சிவமாகி, அருவமே உருமாகி, குருவாகி, விண்ணும் மண்ணும் ஜோதியாக இணைந்து, நீரோட்டம் கொண்ட கல் உயிரோட்டம் பெற்று, பூமியிலிருந்து மேலெழுந்து ஜோதிர்லிங்கமாக வெளிவந்தது. இதை 'லிங்கோத்பவம்' என்கிறோம்.

  ஸ்ரீ பொன்முடி சூர்யநந்தீஸ்வரர் என்ற திருநாமம் கொண்ட இந்த ஜோதிர்லிங்கம், ஜோதிகளுக்கெல்லாம் ஜோதியான ஆத்ம லிங்கம் இது. முடிவேயில்லாத ஆனந்தத்தையும், எல்லையில்லாத அமைதியையும், பிறவிப் பயன்தரும் பிரம்மஞானத்தையும் அள்ளித்தரும் கோடிலிங்கம். ஜென்ம ஸாபல்யம் தரும் அமிர்தலிங்கம். இந்த தெய்வீக அனுபவத்தை அனைவரும் இங்கே உணரலாம். தல வரலாறு பரமேஸ்வரனின் உடலில் அங்கம் வகிக்கும் அகிலாண்டேஸ்வரி (அம்பிகை) முன்னொரு காலத்தில், 'தென் கைலாயம்' என்று போற்றப்படும் பனங்காட்டு பிரதேசமாக விளங்கிய இந்த சென்னப்பமலை திருத்தலத்தில் தவமிருந்தாள். சூரியன், சந்திரன், தேவேந்திரன், குபேரன் போன்ற தேவர்களுக்கும், இந்த பூவுலகில் உள்ள 84 லட்சம் ஜீவராசிகளுக்கும், சாப விமோசனம் அளிக்கும் வகையில் சென்னப்பமலை திருத்தலத்தில் அருள்பாலிக்க பரமேஸ்வரனிடம் வேண்டினாள்.

  அம்பிகையின் வேண்டுகோளை ஏற்று, இதே தலத்தில் பின்னொரு காலத்தில் பிரம்மகுரு ஒருவரால் மகா சிவராத்திரி அன்று 'தானே ஜோதிர்லிங்கமாக இங்கே உத்பவமாகி, தன்னை வழிபடும் அனைத்து உயிரினங்களும் ஜென்ம சாப விமோசனம் பெறலாம்' என்று பரமன் வரம் அருளினார் என்று தலபுராணம் கூறுகிறது. அதன்படி 2002-ம் ஆண்டு மகா சிவராத்திரி அன்று இத்தல ஜோதிர்லிங்கமாக தோன்றி, அனைத்து உயிரினங்களுக்கும் சாப விமோசனம் அளிக்கும் தலமாக மாறியது. அனைத்து உயிரினங்களோடு தேவர்களையும், தேவகணங்களையும் இங்கே பாகுபாடின்றி இணைத்து சாப விமோசனம் அளிப்பது இந்த தலத்துக்கு மேலும் சிறப்பு. ஒவ்வொரு ஜோதிர்லிங்க திருவாலயமும் அதன் தலத்துக்கு ஏற்றவகையில் சிறப்பு வழிபாட்டு முறைகள், நியதிகள் கொண்டவை. அந்தவகையில் சென்னப்பமலை ஜோதிர்லிங்க வழிபாட்டு வழிமுறைகளும் எங்கும் இல்லாத தனிச்சிறப்பு வாய்ந்தவை. இங்கே உயர்ந்தவன்-தாழ்ந்தவன், ஏழை-பணக்காரன், கற்றவன்-கல்லாதவன், ஆண்-பெண், குழந்தைகள், வயோதிகர்கள், ஜாதி, மதம் போன்ற எந்த பேதமும் இல்லாமல், அனைத்து உயிரினங்களும் ஆனந்தம், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் பெற்று 'நாளும், பொழுதும்' வளமும் பெற இறைவன் வரம் தரும் திருத்தலம் இது. மகா சிவராத்திரி அன்று பக்தர்கள் கருவறைக்குள் என்று ஜோதிர்லிங்கத்தை தொட்டு வணங்கலாம். ஏழு முறை தொட்டு வழிபடுவோருக்கு ஜென்ம சாப விமோசனம் கிடைக்கும். ஸ்ரீ பொன்முடி சூரியநந்தீஸ்வரர் உடனுறை ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகையை தொழுபவர்களுக்கு, வித்யா (கல்வி, தொழில்) பாக்கியம், மாங்கல்ய (திருமணம்) பாக்கியம், சந்தான (குழந்தை) பாக்கியம் கிடைக்கும். முயல்வோருக்கு முக்தியும் கிடைக்கும்.

  Previous Next

  نموذج الاتصال