No results found

  சிறுவயது உடல் பருமனை குறைக்கலாம்

  குழந்தை பருவத்தில் உடல் பருமன் பிரச் சினையை எதிர்கொள்பவர்களின் எண்ணிக்கை உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. அதனை கவனத்தில் கொள்ளாதபோது நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் அதிக கொழுப்பு போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். குழந்தை பருவ உடல் பருமனை தடுப்பதற்கான சிறந்த வழிகளில் ஆரோக்கியமான உணவு மற்றும் குடும்பத்தினருடன் தவறாமல் உடற்பயிற்சி செய்வது குறிப்பிடத்தக்கதாகும்.

  * இரவில் காலதாமதமாக சாப்பிடுவது அனைத்து வயதினருக்கும் தீங்கு விளைவிக்கும். குழந்தைகளை பொறுத்தவரை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். பதின்ம வயதினர் பலர் மொபைல்போனை அதிக நேரம் பயன்படுத்துவதையும், இரவில் தாமதமாக தூங்குவதையும் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். இது உடல் பருமன் பிரச்சினைக்கு வித்திடும். இரவில் தூங்கும்போது கூட வளர்சிதை மாற்றம் நடைபெற வேண்டும். இரவு 7.30 மணிக்குள் சாப்பிடுவது நல்லது. இரவில் தூங்கும் நேரமும், காலையில் எழும் நேரமும் தினமும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.

  * குழந்தை பருவ உடல் பருமனை சமாளிக்க நீர்ச்சத்தை தக்கவைத்துக்கொள்வது முக்கிய அம்சமாகும். குழந்தைகள் அறையில் எப்போதும் ஒரு பாட்டில் தண்ணீர், உலர் பழங்கள் வைத்திருக்க வேண்டும். அது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். பகல் பொழுதில் ஆரோக்கியமான பானம் பருகுவதற்கு குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும். அதாவது ஐஸ் டீ, ஐஸ் காபி, எலுமிச்சை ஜூஸ், கிரீன் டீ, பால் பருக வைக்கலாம். இவை உடல் எடையைப் பராமரிப்பதிலும், குழந்தை பருவ உடல் பருமனை தடுப் பதிலும் முக்கிய பங்கு வகிக்கும்.

  * வானவில் உணவு என்பது, உணவில் பல வண்ண பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்ப்பதாகும். உடல் எடையை நிர்வகிக்க இந்த உணவு உதவியாக இருக்கும். தினமும் பச்சை இலை காய்கறிகளுடன் கிவி, மாம்பழம், பெர்ரி மற்றும் சிட்ரஸ் பழங்கள் போன்ற பல வண்ண பழங்களை சாப்பிடலாம். அவற்றில் பல அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. அவை எடையைப் பராமரிக்கவும், உடல் பருமனைத் தடுக்கவும் உதவும். ஆன்டி ஆக்சிடென்ட் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிடுவதும் சிறந்தது.

  * துரித உணவுகள், நொறுக்குத்தீனிகளை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். அத்தகைய உணவு பழக்கத்தை கட்டுப்படுத்துவது கடினமானது. குழந்தை பருவத்தில் சத்தான உணவுகளை உண்பதற்கு பழக்கப்படுத்த வேண்டும். அவற்றை விரும்பி சாப்பிட மாட்டார்கள். ஏதாவது சாப்பிட வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பெரும்பாலான பெற்றோரே குழந்தைகளை நொறுக்குத்தீனிகள் சாப்பிடுவதற்கு பழக்கப்படுத்திவிடுகிறார்கள். அதற்கு இடம் கொடுக்கக் கூடாது. வீட்டில் அதிக கலோரிகள் கொண்ட திண்பண்டங்களை வாங்கி சேமித்துவைக்கக்கூடாது. ஒவ்வொரு முறையும் குழந்தை ஏதாவது சாப்பிட விரும்பினால் அவற்றை வெளியே சென்று வாங்கி வர பழக்கப்படுத்த வேண்டும். அப்படி செய்வது, விரும்பியபோதெல்லாம் சாப்பிடும் எண்ணத்தையும் உடல் பருமன் பிரச்சினையையும் கட்டுப் படுத்தலாம்.

  * நொறுக்குத்தீனிகளை போல ரொம்பவும் பிடித்தமான, ருசியான உணவுகளை ஒரே நேரத்தில் அதிகம் சாப்பிடுவதையும், அடிக்கடி சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். ஏதேனும் விசேஷ தினங்களில் அந்த உணவுகளை தயார் செய்து கொடுக்கலாம். சாப்பிடும் உணவில் கார்போஹைட்ரேட்டு களின் அளவும் குறைவாக இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

  * குழந்தைகள் ஒரே இடத்தில் முடங்கி கிடப்பதற்கு அனு மதிக்கக்கூடாது. உடல் இயக்க செயல்பாடு சீராக நடந்தாக வேண்டும். வெளி இடங்களிலோ, வீட்டுக்குள்ளோ ஓடி விளையாடுவதற்கு அனுமதிக்க வேண்டும். பெற்றோரும் குழந்தை களுடன் சேர்ந்து உடல் இயக்கம் சார்ந்த விளையாட்டுகளில் ஈடுபட வேண்டும்.

  * சர்க்கரை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட மாவு மூலம் தயார் செய்யப்படும் உணவு பதார்த்தங்களை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை உடல் பருமனுக்கு முக்கிய பங்கு வகிப்பவை. திண்பண்டங்களுக்கு மாற்றாக பழ சாலட்டை தேர்ந்தெடுக் கலாம். பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களுக்கு மாற்றாக பாலுடன் நாட்டுச்சர்க்கரை அல்லது கோகோ பவுடர் கலந்து கொடுக்கலாம்.

  குழந்தை பருவ உடல் பருமன் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும், எதிர்காலத்துக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். அதை சரியான நேரத்தில் கட்டுப்படுத்துவது நல்லது.

  Previous Next

  نموذج الاتصال