No results found

  சமூக வலைதளங்களில் சிக்கும் பெண்களை பாதுகாப்பது எப்படி?

  ஆரம்பத்தில் மனிதன் பயணத்திற்கு மாடு, குதிரை வண்டிகளை பயன்படுத்தினான். பின்னர் கார், ரெயில் வந்தது. இப்போது அதிவீன காரில் பறக்கிறான். காலம் தோறும் இப்படி மாற்றம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். அவற்றை பயன்படுத்த தெரிந்து கொள்கிறோம் அல்லவா? அதுபோன்றுதான் இன்றைய காலத்திற்கேற்ப வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை கற்றுக் கொடுக்க வேண்டும்.

  எந்த ஒரு விசயத்திலும் நன்மையும் இருக்கும். தீமையும் இருக்கும். உடல் நலத்துக்கு டாக்டர்கள் கொடுக்கும் மாத்திரையைக்கூட பக்கவிளைவுகள் உண்டு. பேஸ்புக்கில் இருக்காதா என்ன? எப்படி அணுக வேண்டும் என்ற புரிதல் இருந்தால் போதும் பிரச்சினை ஏற்படாது. இதற்கு கற்றுக்கொடுத்தல்தான் முக்கியம்.
  பள்ளியில் இருந்தே இதனை ஆரம்பிக்க வேண்டும். விளையாட்டுக்கு பயிற்சி இருப்பது போல், பொது அறிவுக்கு பாடம் நடத்துவது போல் வாழ் வியல் பற்றிய மனவளக்கலை பயிற்சியும் அளிக்க வேண்டும். அப்போதுதான் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை சந்திக்க அவர்களுக்கு மனதிடம் உண்டாகும்.

  ஒவ்வொரு குழந்தையும் வாழ்க்கை முறை குறித்த விழிப்புணர்வை பெற்று விட்டால் பிரச்சினை ஏற்படும் சமயங்களில் அவர்கள் உடலில் சுரக்கும் ஹார்மோன்களே சிக்கல்களில் இருந்து காப்பாற்றி கொள்ளும் திறனை அளிக்கும்.

  பொதுவாக மூன்று விசயங்களில் ஈர்ப்பு இருக்கும். ஒன்று ஆண்-பெண் கவர்ச்சி. இரண்டாவது புகழ். புகழுக்கு மயங்காதவர்கள் யாருமே கிடையாது. மூன்றாவது அன்பு. அன்புக்கு அடிமையாகாதவர்கள் யாரும் இல்லை. இந்த மூன்றும் கவர்ந்து இழுப்பவை. அதனால் இந்த மூன்றும் கிடைக்கும் இடம் நோக்கி அனைவரும் செல்கிறார்கள்.

  இன்றைய இளைஞர்களுக்கு சமூகவலை தளங்கள் மூலம் இந்த மூன்றும் கிடைக்கிறது. அதாவது அவர்கள் போடும் ஸ்டேடஸ், டிக்டாக் செயலில் ஆடல் பாடல் மூலம் பிரபலம் என்ற புகழ் கிடைக்கிறது. அதன் மூலம் ஆண்-பெண்களிடையே நட்பு ஏற்பட்டு கவர்ச்சியால் ஈர்க்கப்படுகிறார்கள். அடுத்து தொடர்ந்து காட்டும் அன்பில் அவர்கள் மயங்கி விழுகிறார்கள். அதன் பின்னரே இது போன்ற வக்கிரமான குற்றச் செயல்கள் நடக்கின்றன.

  சமூக வலைதளங்கள் மூலம் கிடைக்கும் இவையாவும் உண்மையானவை அல்ல. ஒருவருக்கு ஐந்தாயிரம் பேர் எப்படி நண்பனாக, தோழியாக இருக்க முடியும்? அந்த உறவுகளில் போலியானவையும் இருக்கலாம். எல்லாவற்றையும் உண்மை என்று நம்பி விடுவதால் தான் பிரச்சினையே. வீடு வேறு, வெளிஉலகம் வேறு. வீட்டில் சில குறைகள் இருக்கலாம். வெளியே இருக்கும் பூங்கா பார்க்க பசுமையாக அழகாகத்தான் இருக்கும். அது உங்கள் வாழ்விடம் ஆகாது. அதுபோல் நம் வீட்டு உறவுகள் போல் வெளி தொடர்பு உறவுகள் இருக்காது. அதை உண்மை என்று மயங்காதீர்கள். இந்த இரண்டுக்கும் இடையில் உள்ள மெல்லிய கோட்டை உணர்ந்து கொண்டால் எல்லை மீறாமல் பார்த்துக் கொள்ளலாம்.

  சினிமாவில் நடிக்கும் நடிகர் அந்த கதையுடன் எப்படி தொடர்பு இல்லாமல் இருக்கிறாரோ அது போன்றதுதான் இதுவும். ஆனால் பெண்கள் முகநூலில் காட்டும் அன்பை உண்மை என்று நம்பி படுகுழியில் விழுந்து விடுகிறார்கள். எனவே முகநூலில் ஒரு டேட்டஸ் போடும் போதோ, டிக்டாக் செயலியில் ஆடல் பாடலை போடும் போதோ சற்று சிந்திக்க வேண்டும். இதனால் என்ன பின்விளைவுகள் ஏற்படும் என உணர்ந்து செயல்பட்டால் நல்லது.

  பொதுவாக நேர்மறையான விசயங்களைவிட எதிர்மறையான விசயங்களே மக்கள் மனதில் அதிக ஈர்ப்பையும் தாக்கத்தையும் ஏற்படுத்தும். அதாவது 1:16 என்ற விகிதத்தில் உள்ளது. 16 நல்ல விசயங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை ஒரு கெட்ட விசயம் செய்து விடும். அதனால்தான் குழந்தைகள் எதிர்மறையான செயல்களால் எளிதில் ஈர்க்கப்படுகின்றனர். எனவே எப்பொழுதும் நல்லவற்றையே பேச வேண்டும். நல்லவற்றையே செய்ய வேண்டும். சூழலை நல்லவிதமாக அமைத்துக்கொள்ள வேண்டும்.

  மேலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் தோழமையுடன் நடந்து கொள்ள வேண்டும். கண்டிப்புடன் இருந்தால் அது பெற்றோர்-குழந்தைகளிடையே இடைவெளியை ஏற்படுத்தி விடும். அதில் தான் ஆபத்து உண்டாகிறது. பயத்தின் காரணமாக குழந்தைகள் தங்கள் பிரச்சினையை சொல்ல மாட்டார்கள். இதனால் ஏற்படும் மன அழுத்தம் காரணமாக தங்களுக்கு ஆறுதலாக இருக்கும் நபர்களைத்தேடி செல்வார்கள். இப்படியாகத்தான் கயவர்கள் காட்டும் போலியான அன்பில் மாட்டிக்கொள்கிறார்கள்.

  சமூகவலை தளங்களில் ஆண்கள் வீசும் வலைகளில் பெண்கள் எப்படி சிக்கி கொள்கிறார்கள் என்றால் மனோவசியம் செய்யப்படுகிறார்கள். முகநூலில் நட்பு கொண்ட ஆண்-பெண் இருவரும் தொடக்கத்தில் மனம் விட்டு பேசுகிறார்கள். அடுத்த கட்டமாக அந்த ஆண் தன் விருப்பங்களை திரும்ப திரும்ப கூறுகிறான். எந்தவொரு கட்டளையும் தொடர்ந்து கொடுக்கும் போது அதை செய்ய மனம் பழக்கப்பட்டு விடுகிறது. பறவைகள், விலங்குகளை பழக்கப்படுத்துகிறோம் அல்லவா, அது போல் தான். அந்த நபர் மீது நம்பிக்கை ஏற்பட்டதும் அவள் தன்னை சுற்றி அமைத்திருந்த வேலியை உடைத்து விடுகிறாள். அதன் பின் அவன் சொல்கிறபடி நடக்க தொடங்குகிறாள். இந்த மனோவசியத்தில் தான் பெண்கள் சிக்கி கொள்கிறார்கள்.

  பொதுவாக பெண் குழந்தைகள் இதுபோன்ற விசயங்களை வெளியே சொல்ல மாட்டார்கள் என்பதால் ஆண்கள் துணிந்து தவறு செய்கிறார்கள். பெண் குழந்தைகளும் பெற்றோரிடம் எதனையும் தெரியப்படுத்தும் நிலையில் இருந்தால் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது. எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் அன்பாக தோழமையாக நடந்து கொண்டால் அவர்கள் தங்களுக்கு ஏற்படும் எந்த பிரச்சினைகள் என்றாலும் தயங்காமல் தெரிவிப்பார்கள். பின் விளைவுகள் ஏற்படும் முன்னரே தடுத்து நிறுத்தி விடலாம்.

  மேலும் பெற்றோர்கள் என் குழந்தை அப்படியெல்லாம் தவறு செய்யமாட்டான். அந்த துணிவெல்லாம் அவனுக்கு கிடையாது என்றும், என் குழந்தை எந்த பிரச்சினையென்றாலும் சமாளித்து விடுவான் என்றும் நம்பியிருக்கக் கூடாது. அதுவும் ஆபத்தை விளைவிக்கும்.

  குழந்தைகளிடம் கஷ்டப்பட்டு படிங்க, கஷ்டப்பட்டு வேலை செய்யுங்க. அப்போதுதான் நல்லா இருக்கலாம் என்று சொல்லி வந்தால், தேவையான விஷயங்களை செய்ய கஷ்டம்தான் படணும், மகிழ்ச்சிக்கான தேடல் என்பது நல்ல விசயங்களில் இருக்காது போல என நினைத்து கேளிக்கை விசயங்களில் நாட்டம் கொள்கின்றனர். எனவே அவர்கள் எதனையும் இஷ்டப்பட்டு செய்யும் வகையில் நடந்து கொண்டால் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அவர்கள் மனம் கெட்ட விசயங்களில் அலை பாயாது.

  நாம் எந்த விசயத்தை அடிக்கடி நினைக்கிறமோ, விரும்புகிறமோ அது ஆழ்மனதில் பதிந்து விடும். அதனால் குழந்தைகளிடம் எப்போதும் நல்லவற்றையே பேச வேண்டும். அவர்களை சுற்றிலும் நல்ல சூழலை ஏற்படுத்த வேண்டும். இல்லை என்றால் எவ்வளவுதான் உணர்வு மனதளவில் நாம் நல்லவற்றை எண்ணி னாலும் ஆழ்மனதில் கெட்ட விசயங்கள் பதிந்திருந்தால் அதுவே வெளிப்பட்டு செயலாகும்.

  இரண்டு வகையான பார்வை இருக்கிறது. பிரச்சினைகள் இல்லாத சூழலை ஏற்படுத்துவது ஒரு விசயம். பிரச்சினைகள் இருந்தாலும் அதில் இருந்து எப்படி தற்காத்து கொள்வது? ஒரு விசயத்தில் பிரச்சினை இருக்கிறதா இல்லையா? பிரச்சினை இருந்தால் அதனை எப்படி கையாள்வது என்பது குறித்து பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கும் அறிவுத்த வேண்டும்.

  இந்த பாலியல் சம்பவத்தால் பாதிக் கப்பட்ட பெண்களுக்கு ஒரு மனநல வாழ்வியல் ஆலோசகராக நான் என்ன சொல்ல விரும்புகிறேன் என்றால் இந்த பாதிப்பால் அவர்கள் சுருண்டு போய்விடக் கூடாது. இது அவங்களுக்கு ஒரு பெரிய விபத்தாக இருக்கிறது. சாதாரணமாக ஒரு விபத்தை கண்ணால் பார்த்தால் கூட அது மனதுக்குள் ஒரு அதிர்ச்சியை துயரத்தை ஏற்படுத்தும். ஆனால் அவர்களே விபத்தில் சிக்கி இருக்கும் போது எப்படி இருக்கும்? அதுவும் தன் மீது அன்பு காட்டிய நபரே இப்படி நடந்து கொண்டதால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பார்கள். பெரிய பாரமாக தான் இருக்கும். இந்த சம்பவம் அவர்கள் மனதில் சித்திரமாக பதிந்திருக்கும். இது பின்னாட்களில் வேறு எது நடந்தாலும் பதட்டத்தை ஏற்படுத்தும். எனவே அதில் இருந்து மீட்டெடுக்க அவர்களுக்கு தகுந்த மனநல சிகிச்சையும் மனநல திட பயிற்சியும் அளிக்க வேண்டும்.

  Previous Next

  نموذج الاتصال