No results found

  திருமண வயது உயர்வும்.. குழந்தை திருமண பின்னணியும்..

  பெண்களுக்கான திருமண வயதை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்தும் மசோதாவுக்கு சமீபத்தில் மந்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டிருக்கும் (18) வயதை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்ற சட்டம் நடைமுறையில் இருந்தபோதிலும் குழந்தை திருமணங்கள் நாட்டில் அதிகரித்துள்ளன.

  குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்துவதற்கு அதிகாரிகள் சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். சம்பந்தப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து போதிய விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறார்கள். துரிதமான நடவடிக்கைகள் மூலம் மக்கள் மத்தியில் பாராட்டையும் பெறுகிறார்கள். அப்படிப்பட்ட அதிகாரிகளுள் ஒருவர், டி.பூபாலன். ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் மாவட்ட பஞ்சாயத்துக்களின் சி.இ.ஓ.வாக இருக்கிறார்.

  கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தியதில் இவரது பங்களிப்பு அளப்பரியது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு, அதைத்தொடர்ந்து ஏற்பட்ட வாழ்வாதார இழப்பு, வறுமை போன்ற காரணங்களால் மாவட்டத்தின் பல பகுதிகளில் குழந்தை திருமணம் நடப்பதாக ஏராளமான புகார்கள் வந்தன. கொரோனா தொற்றுக்கு முன்பு ஆங்காங்கே குழந்தை திருமணங்கள் நடந்திருந்தாலும் ஊரடங்கு சமயத்தில் திருமணங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண கிராம மக்களுடன் ஒரு மாத காலம் செலவிட்டார்.

  குழந்தை திருமணம் என்பது ஊட்டச்சத்து குறைபாடு, பள்ளி இடைநிற்றல், ரத்த சோகை மற்றும் பிரசவத்தில் தாய் இறப்பு போன்ற பிரச்சினைகளுடன் நெருக்கமான தொடர்பை கொண்டது என்பதை அவர் புரிந்து கொண்டார். குழந்தைத் திருமணத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு பல அணுகுமுறைகளை வகுத்தார்.

  கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், காவல்துறை அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் வருவாய் அலுவலர்கள் அடங்கிய குழுக்களை அமைத்தார். அந்த குழுக்கள் மூலம் ஒருங்கிணைந்து செயல்பட்டு 170-க்கும் மேற்பட்ட குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தினார். சில பெற்றோர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ததோடு மட்டுமல்லாமல், குழந்தை திருமணத் தடைச் சட்டம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தீர்மானித்தார்.

  இதற்காக உள்ளூர் அரசு அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்களைக் கொண்ட அரசு அதிகாரிகள் குழுக்களை அமைத்தார். மேலும் கிராமசபை அளவில் குழுக்களையும் அமைத்தார். அந்த குழுவினர் குழந்தைத் திருமணத்தால் பெண்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகள் குறித்து கிராம மக் களிடம் எடுத்துரைத்தார்கள். குழந்தை திருமணம் நடப்பது குறித்து புகார் தெரிவிக்கும் நபர்களின் பெயர்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்று உத்திரவாதம் அளித்தார்கள்.

  தங்கள் விருப்பமின்றி திருமணம் நடப்பதாக அதிகாரிகளிடம் புகார் அளித்தால், பெற்றோர் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் தங்களை ஒதுக்கி வைத்துவிடுவார்கள் அல்லது பழிவாங்கிவிடுவார்கள் என்ற எண்ணம் பலரிடம் இருக்கிறது. அந்த பயத்தை போக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்தார். 1098 ஹெல்ப்லைனை அழைக்கலாம் அல்லது உள்ளூர் அதிகாரியை நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என்ற நிலையை ஏற்படுத்தினார். தனது மொபைல் எண்ணையும் வழங்கினார்.

  குழந்தை திருமணத்தில் இருந்து மீட்கப்பட்ட பெண்-ஆண் குழந்தைகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. பின்னர் அவர்கள் வீட்டிற்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டனர். சிலர் குழந்தைகள் நல இல்லத்தில் தங்கவைக்கப்பட்டனர். அங்கு அவர்களின் மறுவாழ்வுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. குறிப்பாக இளம் பெண்களுக்கு மாடு, கோழி வளர்ப்பு, தையல், எம்பிராய்டரி மற்றும் கணினி அறிவியல் போன்ற திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. படிப்பின் மீது ஆர்வம் இருக்கும் பெண்கள் உயர் கல்வியை தொடர்வதற்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. வீட்டிற்கு அனுப்பப்படும் குழந்தையின் நிலையை கண்காணிக்கும் பொறுப்பும் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

  மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள மொகடா தாலுகாவிலுள்ள ஷிவாலி என்னும் கிராமத்தில் பெண்கள் 15 வயதை அடைந்தவுடன் திருமணம் செய்து வைக்கும் வழக்கம் நீண்ட காலமாக நடைமுறையில் இருந்து வந்தது. அரோஹான் என்னும் அமைப்பு பெண் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் தொழில் பயிற்சிகளை வழங்கி வருகிறது. இப்போது ஷிவாலி கிராமத்தைச் சேர்ந்த 175 குடும்பங்கள் மனம் மாறியுள்ளன. அங்கு குழந்தை திருமணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

  குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்துவதற்கு கடும் முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் முற்றிலும் ஒழிக்கமுடியாத நிலை நிலவுகிறது. அதற்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.

  20-24 வயதுடையவர்களில் நான்கில் ஒரு பெண் தற்போது நடைமுறையில் இருக்கும் சட்டப்பூர்வ (18) வயதுக்கு முன்பே திருமணம் செய்து கொள்கிறார் என்று ஐந்தாவது தேசிய குடும்ப சுகாதார ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. திருமணத்திற்கான சட்டப்பூர்வ வயதை அதிகரிப்பது, கடந்த காலத்தை விட அதிகமான குழந்தை திருமணங்கள் நடப்பதற்கு வழிவகுத்து விடக்கூடாது என்பது குழந்தை திருமணத்திற்கு எதிராக போராடுபவர்களின் கருத்தாக இருக்கிறது.

  குறைந்தபட்ச வயதை உயர்த்துவதற்குப் பதிலாக, ஏற்கனவே உள்ள சட்டங்களை கடுமையாக அமல்படுத்துவது, பெண் குழந்தைகளுக்கு கல்வியில் முன்னுரிமை கொடுப்பது, பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பெண்களுக்கு அதிகாரமளிப்பது போன்ற விஷயங்களை ஊக்குவிப்பது இளவயது திருமண நிகழ்வைக் குறைப்பதற்கான சிறந்த அணுகுமுறையாகும் என்பது அவர்களின் கருத்தாக இருக்கிறது.

  ஆழமாக வேரூன்றிய பாலின சமத்துவமின்மை, நிதி பாதுகாப்பின்மை, பிற்போக்குத்தனமான எண்ணங்கள், தரமான கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் இல்லாமை போன்ற பல காரணிகள் குழந்தை திருமணங்கள் மற்றும் கட்டாய திருமணங்களுக்கு காரணமாக இருக்கின்றன என்பதும் அவர்களின் வாதமாகவும் இருக்கிறது.

  Previous Next

  نموذج الاتصال