No results found

  பெண்களுக்கு லாபகரமான சிறு முதலீட்டு தொழில்கள்

  தொழில்துறையில் நுழைந்து, உச்சம் தொட்டு கோடிகளை சம்பாதித்து வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமென்ற ஆசை இல்லாதவர்கள் யாரும் இல்லை. ஆனால் என்ன தொழில் செய்வது, எப்படி செய்வது, சிறு முதலீட்டில் என்ன தொழில் தொடங்க முடியும், அதில் அதிக லாபம் கிடைக்குமா? என்பது போன்ற பல கேள்விகள் நம் மனதில் எழும். அப்படி தொழில்துறையில் சாதிக்க ஆசைப்படும் பெண்களுக்கு வழிகாட்டும் கட்டுரை இது. சிறு முதலீட்டில் எத்தகைய தொழில்களை தொடங்கலாம் என்பதை பார்ப்போம்.

  ஐஸ்கிரீம் கோன்

  கோன் ஐஸ் என பிரபலமாக அழைக்கப்படும் ஐஸ்கிரீம் வகையில் ஐஸ்கிரீமை நிரப்ப பயன்படுத்தும் பிஸ்கட் கோன் தயாரிப்பு நல்ல லாபம் அளிக்கும் தொழிலாகும். பெருகி வரும் ஐஸ்கிரீம் பார்லர்கள், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் வழங்கப்படும் இந்த கோன் ஐஸ்களுக்கான கோன் தயாரிக்க மிக சிறிய அளவிலான இடம் இருந்தால்கூட போதும். இதை தயாரிப்பதற்கான இயந்திரத்தின் விலை சுமார் ரூ.1 லட்சம் முதல் ரூ.1.5 லட்சம் வரைதான். இதையே முக்கிய தொழிலாக மேற்கொண்டு மொத்தமாக உற்பத்தி செய்து விற்பனை செய்ய விரும்பினால் முதலீடு சற்று கூடும்.

  சாக்லேட் தயாரிப்பு

  இனிப்புகளை விரும்பாதவர்கள் உண்டா?, சாக்லேட் பிடிக்காத குழந்தைதான் உண்டா?. என்னதான் கவலையான மனநிலையில் இருந்தாலும் ஒரு சாக்லேட்டை எடுத்து வாயில் போட்டால் நம் கவலை பறந்தோடி, சகஜ மனநிலைக்கு திரும்பலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், 2015-2016-ம் ஆண்டு காலகட்டத்தில் சாக்லேட் உற்பத்தி சுமார் 13 சதவீதம் வளர்ச்சி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. எனவே, வீட்டிலேயே சுமார் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் முதலீட்டில் சாக்லேட் தயாரிப்புத் தொழிலில் துணிந்து இறங்கலாம். இதையே நாம் பெரிய அளவில் செய்ய விரும்பினால் சாக்லேட்டுகளை துண்டு துண்டாக வெட்ட பயன்படும் இயந்திரம், சாக்லேட் கலவை மிஷின், உற்பத்தி செய்யும் கலன், பேக்கிங் என சுமார் ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை முதலீடு செய்ய வேண்டியிருக்கும்.

  நூடுல்ஸ் தயாரிப்பு தொழில்

  நூடுல்ஸ் தற்போது நகர்புறம் மட்டுமின்றி கிராமப் பகுதிகளிலும் பிரபலமான உணவாக மாறி வருகிறது. அனைத்து கடைகளிலும் கிடைக்கும் இந்த நூடுல்ஸ் தயாரிப்பு மிக எளிமையானது. இதற்கு தேவையான மூலப் பொருட்களான கோதுமை மாவு, உப்பு, சர்க்கரை, ஸ்டார்ச் மாவு மற்றும் தாவர எண்ணெய் போன்றவற்றை சரியான விகிதத்தில் கலந்து, நூடுல்ஸ் தயாரிப்புக்கென்றே வடிவமைக்கப்பட்டுள்ள இயந்திரத்தில் நிரப்பினால் நாம் விரும்பிய வடிவில், அளவில், நிறத்தில் நூடுல்ஸ் ரெடி. அதனை உலர வைத்து, பேக்கிங் செய்து விற்பனை செய்து நல்ல லாபம் ஈட்டலாம். மிகக் குறைந்த அளவிலான நூடுல்ஸ் தயாரிப்பு இயந்திரத்தின் விலை சுமார் ரூ.40 ஆயிரம். மிக தரமான அதிகளவில் நூடுல்ஸ் தயாரித்து விற்பனை செய்ய விரும்புபவர்கள் ரூ.1.5 லட்சத்தில் உள்ள அதிக திறனுடைய இயந்திரத்தை வாங்கி பயன்படுத்தலாம்.

  சணல் மற்றும் காகிதப் பை

  பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகளை நாடு முன்னெடுத்து செல்லும்போது, மக்களும் அதற்கான மாற்று நடைமுறைகளை பின்பற்ற தொடங்கிவிட்டனர். அதன் வெளிப்பாடுதான் கலர் கலரான, டிசைன் டிசைனான சணல் மற்றும் காகிதப் பைகள். தற்போது மருந்துக் கடைகள், ஜவுளிக் கடைகள், ஜூவல்லர்ஸ் தொடங்கி காய்கனி கடை வரை இந்த வகைப் பைகள் தான் பயன்படுத்தப்படுகின்றன.

  சணல் பை தயாரிப்பு மிக எளிதான தொழிலாகும். வெறும் 500 சதுர அடி பரப்பளவில் இந்த தொழிலை மேற்கொள்ளலாம். முதலீடு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை போதும். ஆனால் காகிதப் பை தயாரிப்பு அதிக முதலீடு தேவைப்படும் தொழில். காகிதப் பை தயாரிப்பு இயந்திரத்தின் விலை ரூ.5 லட்சம் வரை ஆகும். ரூ.3 லட்சத்திலும் காகிதப் பை தயாரிப்பு மெஷின்கள் கிடைக்கின்றன. ஆனால் அதில் அதிக அளவிலான மனித உழைப்பும் தேவைப்படும்.

  Previous Next

  نموذج الاتصال