No results found

  நம்பிக்கைதான் வாழ்க்கையை வளப்படுத்தும்

  வாழ்க்கையில் நடக்கும் சில விஷயங்கள் நம்மை நம்பிக்கை இழக்கச் செய்திடும். ‘தொடர்ந்து இதேபோல நடக்காது. அடுத்து நல்லதே நடக்கும்’ என்று நம்பிக்கை கொள்ள வேண்டும். அப்படி நம்பிக்கை கொண்டால்தான் தொடர்ந்து வாழ்க்கையை நிம்மதியாக வாழ முடியும். ஒருமுறை ரெயிலில் பயணிக்கும்போது விபத்து நேர்ந்துவிட்டது என்பதற்காக ரெயில் பயணத்தையே தவிர்த்துவிட முடியாது. அதுபோலத்தான் சில விஷயங்கள் அமைந்திருக்கும். எப்போதும் நல்லதே நடக்கும் என்பது நிச்சயமில்லாதது. அதற்காக வாழ்க்கை மீது நம்பிக்கை இழந்துவிடக்கூடாது. ஒருசில விஷயங்களை கவனத்தில் கொள்வதன் மூலம் நம்பிக்கையை வளர்க்கலாம். நிம்மதியை தக்கவைத்துக்கொள்ளலாம்.

  மாற்றம்: எப்போதும் வாழ்க்கை ஒரே மாதிரி இருப்பதில்லை. சில நேரங்களில் நம்மை நாமே மாற்றிக்கொண்டு முன்னேற வேண்டி இருக்கும். அந்த நேரத்தில் நான் இப்படித்தான் இருப்பேன் என்று முரண்டு பிடித்தால் காலம் நமக்காக காத்திருக்காது. சூரியன் போகும் திசையெல்லாம் தன்னை திருப்பி கொள்ளும் சூரிய காந்தி செடியை போல வாழ்க்கையின் பாதையை தேர்ந்தெடுத்து பயணத்தை தொடங்க வேண்டும். நம்முடைய மகிழ்ச்சி நமக்கு முக்கியம் என்றால் மாற்றமும் முக்கியம். நம்மை மாற்றிக்கொண்டால் புதிய நம்பிக்கை தோன்றும். மாற்றம் என்பது பல நன்மைகளை கொண்டு வந்து சேர்க்கும்.

  சரியான முடிவு: நாம் எடுக்கும் ஒருசில முடிவுகள் நம் வாழ்க்கை பாதையை மாற்றிவிடும். சரியான நேரத்தில் சரியான முடிவு எடுக்கப்பட வேண்டும். இதற்கும் நம்பிக்கைதான் பக்கபலமாக அமையும். தன்னிடம் வேலை பார்த்தவன் ஏமாற்றிவிட்டு சென்றுவிட்டான் என்பதற்காக வேலைக்காரரே வேண்டாம் என்று முடிவு செய்துவிடக்கூடாது. நேர்மையான, நம்பிக்கையுள்ள வேலைக்காரரை பணியில் அமர்த்திக் கொள்ளலாம். எல்லா வேலைக்காரர்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை. கல்வி, தொழில், எதிர்கால திட்டம் போன்ற விஷயங்களில் நம்பிக்கையோடு முடிவெடுக்க வேண்டும். பயந்தோ, சந்தேகமோ கொண்டு நிலை தடுமாறி நல்ல வாய்ப்புகளை நழுவ விட்டுவிடக்கூடாது. நம்பிக்கையுடன் இருந்தால்தான் நல்ல முடிவுகள் மனதில் உதிக்கும்.

  சூழ்நிலை: எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் மனம் தளர்ந்துபோய்விடக்கூடாது. நெருக்கடியான சூழ் நிலையை சமாளிக்க வேறு வழி இருக்கிறதா என்று யோசிக்க வேண்டும். அது அலுவலகமாக இருந்தாலும், வீடாக இருந்தாலும் சரி சூழ்நிலையை திறம்பட கையாளும் மனப்பக்குவம் கொண்டிருக்க வேண்டும். தங்கள் பிள்ளைகளின் போக்கு சரியாக இல்லை என்றால், அவர்களின் எதிர்காலம் என்னவாகுமோ என்று பீதியடையக்கூடாது. உங்களது கடந்த காலத்தையும், பிள்ளைகளின் சுபாவத்தையும் ஒப்பிட்டுப்பார்த்து நம்பிக்கை இழந்துவிடக்கூடாது. அந்த காலத்திற்கும், இந்த காலத்திற்கும் இடையே எவ்வளவோ மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டது. அதை மனதில் கொண்டு தற்கால சூழ்நிலைக்கேற்ப உங்களை நீங்களே மாற்றிக்கொள்ளுங்கள். வீட்டில் இருக்கும் மற்றவர்களையும் மாறச்சொல்லுங்கள். நிலைமை கட்டுக்குள் வந்து விடும். அதைவிட்டுவிட்டு புலம்பிக்கொண்டிருக்கக்கூடாது.

  உடல் நிலை: உடல் நிலை பாதிக்கப்பட்டால் நம்பிக்கையை விட சிறந்த மருந்து வேறு எதுவுமில்லை. `நம்பிக்கை இல்லாத வைத்தியம் கைகூடாது’ என்பார்கள். சிக்கலான நேரத்தில் அவ நம்பிக்கை கொள்வது பெரிய பிரச்சினைகளுக்கு வித்திடும். ஒருவருக்கு ‘பிரைன் ட்யூமர்’ என்னும் மூளை சார்ந்த நோய் பாதிப்பு உண்டாகிவிட்டது. அவர் நம்பிக்கையை இழந்து புலம்ப ஆரம்பித்துவிட்டார். கணவரின் நிலையை நினைத்து கவலை கொண்ட மனைவி திடீரென்று தற்கொலை செய்து கொண்டார். பிள்ளைகளை பற்றி சிந்திக்காமல் அவர் செய்த காரியம் குடும்பத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கணவர் மீது இருந்த அன்பு காரணமாக அவர் இறப்பதற்கு முன்பு தான் மரணித்துவிட வேண்டும் என்று நினைத்து ஆவேசமாக அந்த பெண்மணி இப்படியொரு முடிவெடுத்துவிட்டதாக பலரும் நினைத்தார்கள். ஆனால் நடந்தது அதுவல்ல. கண வருடைய நம்பிக்கை இழந்த பேச்சு, நடவடிக்கை, மனைவியை பார்த்து அவர் பேசிய அநாகரிகமான வார்த்தைகள் அவரை மிகவும் பாதித்துவிட்டது. தற்கொலை முடிவெடுத்துவிட்டார்.

  உடல்நிலை சரி இல்லை என்றால் மன தைரியத்தையும், நம்பிக்கையையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். தனது வாழ்க்கை அவ்வளவுதான், இனி பிழைப்பது கஷ்டம் என எதிர்மறையான வார்த்தைகளை பேசி உடன் இருப்பவர்களை வேதனையில் ஆழ்த்தக் கூடாது. ‘என் தொல்லையில் இருந்து உனக்கு விடுதலை கிடைக்கப் போகிறது. இனி நீ நிம்மதியாக இரு’ என்பது போன்ற வார்த்தைகளை அந்த பெண்மணியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அந்த விரக்தியில்தான் அவர் தற்கொலை முடிவை எடுத்துவிட்டார். அவருடைய விபரீத முடிவால் பிள்ளைகள் அனாதை களாகிவிட்டார்கள். இதற்கு காரணம் அவநம்பிக்கைதான். அவநம்பிக்கை என்பது நம்மை அதலபாதாளத்தில் தள்ளிவிடும்.

  நம்மிடம் உள்ள குறைகளும் நம்மை பின்னுக்கு தள்ளிவிடும். நம்முடைய பலமும், பலவீனமும் நமக்கு தெரியும். அதையே நினைத்து வாழ்க்கையை நகர்த்திவிட முடியாது. நெருக்கடியான சூழ்நிலையில் தைரியமாக நாம் எடுத்து வைக்கும் காலடி நமக்கு வழி காட்டும். நம்பிக்கை நல்வழியை அமைத்துக்கொடுக்கும். நெஞ்சில் நம்பிக்கை துளிர்விடும்போதுதான் புதிய முயற்சிகள் தொடங்கும். நம்முடைய குறைகள் சமன் செய்யப்படும். மகிழ்ச்சியான மனிதர்களாக வாழவைக்கும்.

  அவநம்பிக்கை: சில சமயங்களில் சூழ்நிலை சாதகமாக இல்லாதபட்சத்தில் அவநம்பிக்கையோடு சிந்திக்க வைக்கும். எந்த சூழ்நிலையும் மாறும் தன்மையுடையது. நம்பிக்கையை மட்டும் மனதில் விதைத்தால் போதும். நல்ல எதிர்காலம் துளிர்விடும்.

  Previous Next

  نموذج الاتصال